முற்றம்
[DICTIONARY]
வாயால் எழுப்பப் படும் ஒலிக் குறிப்புகள் மூலம் தங்களுக்குள் தொடர்பு கொண்ட மனிதன் உள்ளிட்ட விலங்குகளும் பறவைகளும் மற்ற உயிரினங்களும் இயல்பாகப் பயன்படுத்தியவை ஊ, ஆ, ஈ, கா, மா, கூ போன்ற நெடில் ஒலிக் குறிப்புகளே. இன்றும் அதனை நாம் கேட்டுணரலாம். மனிதனைப் பொறுத்த வரை ஊ என்ற ஒலிக் குறிப்பே முதன்மையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும். பின்னர் அபாயத்தை அறிவிப்பது போன்ற சூழலுக்குட்பட்டு உ உ உ .. போன்ற குறில் ஒலித் தொடர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். மனிதனை விலக்கிப் பார்த்தோமானால் இத்தகு நெடில் மற்றும் குறில் ஒலிக் குறிப்புகளே இன்றளவும் பெரும்பாலான உயிர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது.
மனிதனின் அறிவு வளர்ச்சியில் மொழியும், மொழி வளர்ச்சியில் அவனது உற்று நோக்கும் பண்பும் தலையாய பங்கு வகிக்கின்றன. அவனது வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் கதிரவன், தாவரங்கள், வேட்டை விலங்குகள் போன்றவற்றிடம் பொதுவான சில குணங்களைக் காண்கிறான். இம்மூன்றும்
- முன்னிருத்தல்
- முளைத்தல்
- தோன்றுதல்
- மேலெழும்புதல்
- உயர்தல்
- மேற்செல்லுதல்
- பெரிதாதல்
- வலிதாதல்
- வளைதல்
- சுற்றுதல்
- காய்தல்
- எரிதல்
- சிறிதாதல்
- கீழிறங்குதல்
- உள்ளடங்குதல்
- கீழே தங்குதல்
போன்ற பல்வேறு குணங்களையும் செயல்களையும் பொதுவாகக் கொண்டிருக்கக் காண்கிறான்.
தானும் பிற வேட்டை விலங்குகளும் வேட்டையின் போது
- குத்துதல்
- துளைத்தல்
- ஊடுருவுதல்
- ஊடுருவி வெளிப்படுதல்
- அழித்தல்
- கெடுத்தல்
போன்றவற்றை நிகழ்த்துவதைக் கண்டுணர்கிறான். தமிழின் முதன்மை வேர்ச்சொல் ‘உல்’ இப்போதே பிறக்கிறது. ‘ஊ’ விலிருந்து தோன்றி ‘உ’ வுக்கு உயர்ந்து ‘உல்’ லுக்குள் மேற்செல்கிறான்.
மொழிகளின் தாய் தமிழாயின் தமிழ்ச் சொற்களின் தாய் ‘உல்’லாகும்.
‘உல்’லே
- ‘ஒல்’லுக்கும்
- ‘அல்’லுக்கும்
- ‘எல்’லுக்கும்
- ‘இல்’லுக்கும்
வேராகும்
- ‘உர்’ருக்கும்
- ‘உள்’ளுக்கும்
- ‘உன்’னுக்கும்
- ‘உரு’வுக்கும்
- ‘உறு’வுக்கும்
- ‘உல’காகும்
ஆனால் இவ்வறிவு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ தமிழனுக்குப் புகட்டப்படுகிறதா வென்றால் இல்லை யென்பதே பதில். இவ்வறிவு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி கொடுத்தது. தமிழரும் தமிழ் வேர்ச் சொல் ஆய்வரும் நிச்சயம் தம் இல்லத்தில் வைத்துப் போற்ற வேண்டிய நூல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி யாகும். போற்ற வேண்டிய அறிஞர் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் அடிப்படையில் ஒரு வேர்ச் சொல் முதலி உருவாக்கப் பட்டு வருகிறது. அம் முதலி ஆக்கம் பெறப் பெற நம் இணையதளத்தில் வெளியிடப் பட்டு.வரும்.
தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுங்கள்.
வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!