[ HOME ]

img

தமிழின் வளர்ச்சியே தமிழனின் வளர்ச்சி. அதற்கொப்ப தமிழனின் வளர்ச்சியும் தமிழின் வளர்ச்சிக்கு வித்தாக வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பெறும் அறிவும் தமிழனுக்குள் ஏற்றப்பட வேண்டும்; ஒவ்வொரு தமிழனும் பெறும் அறிவும் அப்படியே தமிழுக்கும் கடத்தப்பட வேண்டும். தமிழனிடமிருந்து மொழிக்குச் செய்யப்படும் அறிவுக் கடத்தல் புதுச் சொல்லாக்கங்கள் மூலம் செயற்படுத்தப்பட வேண்டும்.

இந்நேரம் நம்முள் பல வினாக்கள் எழுகின்றன.

  • புதிய தமிழ்ச் சொற்களை ஆக்குவோர் யாவர்?
  • ஆக்கப்படும் புதுச் சொற்களுக்கு ஒப்புதல் அளிப்பவர் யாவர்?
  • ஒப்பளிக்கப்பட்ட சொற்களைப் புழங்க விடுவோர் யாவர்?
  • புழக்கத்துக்கு வரும் சொற்களைப் பயனாக்குவோர் யாவர்?

அனைத்து வினாக்களுக்கும் பொதுவான ஒரே விடை தமிழர் என்பது தான். ஆயினும் எத்தகு தமிழர் என்பதே அனைத்திலும் முக்கியமான வினாவாகும்.

மேற்கண்ட வினாக்களை மாற்றி அமைத்துப் பார்ப்போம்

  • புதிய தமிழ்ச் சொற்களை யார் ஆக்க வேண்டும்?
  • ஆக்கப்படும் புதுச் சொற்களுக்கு யார் ஒப்புதல் அளிக்க வேண்டும்?
  • ஒப்பளிக்கப்பட்ட சொற்களை யார் புழங்க விட வேண்டும்?
  • புழக்கத்துக்கு வரும் சொற்களை யார் பயனாக்க வேண்டும்?

தக்கார் ஆக்கும் புத்தமிழ்ச் சொல்லே தகைமை வாய்ந்த சொல்லாகும். 

1974ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையானது செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தை உருவாக்கியது. இத்திட்டத்தின் விளைவாக 13,270 பக்கங்களுடன் 31 தொகுதிகளாக செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உருவாக்கம் பெற்றது. மேலும் 1300 மூலமான சொற்களில் இருந்து அவற்றிற்கான வேர்ச்சொற்களைப் பிரித்தெடுத்து வேர்ச்சொல் சுவடி என்ற நூலையும் வெளியிட்டுள்ளது. கீழே தரப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி நம் இணையதளத்தில் நூல்கள் பகுதியில் பதிவேற்றப்பட்டுள்ள இச்சுவடியைப் படிக்கலாம். 

https://vercholveedu.com/images/pdf/406004Ver%20Chol%20Chuvadi.pdf

இயக்ககத்தின் அடிப்படை நோக்கமான பேரகரமுதலி ஆக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து பல்வேறு அகரமுதலிகளை உருவாக்குவதுடன் கலைச்சொற்களை ஆக்கி, அவற்றைச் சேகரித்து வெளியிடும் சீரிய பணியில் தம்மை ஈடுபடுத்தியுள்ளது. இப்பணியை தமிழ்நாட்டரசு சொற்குவை என்ற திட்டத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறது. தமிழர்கள் பெருமளவில் பங்கேற்று புத்தமிழ்ச் சொற்களை வாரி வழங்க, தமிழறிஞர் பெருமக்கள் அவற்றை ஆய்ந்து பயனுக்குக் கொண்டு வரும் பெரும்பணியைச் செய்து வருகிறார்கள்.

சொற்குவை இயக்கத்தின் இணையதளம்:

https://www.sorkuvai.com

மேலும் பல்துறைத் தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழாய்வினை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டரசு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தி பல்வேறு திட்டங்களின் வழியே செயலாற்றி வருகிறது.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய கீழே சொடுக்குங்கள்

https://ulakaththamizh.in

தமிழ்நாட்டரசின் மற்றுமோர் அமைப்பு தமிழ் இணையக் கல்விக்கழகம். இதன் முக்கியமான குறிக்கோள் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இணையம் வழியாகதமிழ்க் கல்வியளிப்பது மற்றும் கணினித் தமிழை வளர்ப்பதாகும். மேலும் அறிய சொடுக்குங்கள்

https://www.tamilvu.org

இவ்வகையில் நம் இணையதளத்தின் பங்கென்ன?

1. தமிழின் பெருமையும் வளர்ச்சியும் அதன் வேர்களில் தான் உள்ளது. தமிழ் மக்களுக்கு அதனை யுணர்த்தும் வகையில் தமிழக அரசின் வேர்ச்சொல் சுவடியை விரிவாக்கி வேர்ச் சொல் முதலி யொன்றை யாக்குதல்.

2. தமிழில் ஏற்கனவே வழங்கி வரும் சொற்களன்றி இனி வழங்கத் தகுந்த புத்தமிழ்ச் சொற்களையும் முன்பே யுருவாக்கி வைத்தால் நன்று தானே! இவ் வெண்ணத்தி னடிப்படையில் புத்தமிழ்ச் சொல் வைப்பக மொன்றை யேற்படுத்துதல்.

3. வருங்காலத் தமிழ்க் குடிமக்கள் மொழிவல்லாராக உயர்வாழ்வு வாழ வேண்டுமாயின் அவர்கள் வேர்ச் சொல்லடிப்படையிலான தமிழ்க் கல்வி பயின்றாக வேண்டும். அத்தகு வேர்ச் சொல் வழியிலான தமிழ்க் கல்விக்கான பாடத் திட்ட மொன்றைத் தயாரித்து அதனடிப்படையில் தமிழ் மொழிக் கல்வி வழங்குதல்.

4. ஒருவரது பெயரென்பது அவரது பெயர் மட்டுமல்ல, அவரது அடையாளமுமாகும். ஒருவர் தமிழரா அல்லவா என்பதை நமக்கு முதலில் அவரது பெயரே தெரிவிக்கும். அது மட்டுமன்றி தமிழின் வாழ்வுக்கும் தமிழில் பெயர் சூட்டுதல் அடிப்படையாக அமைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் பெயர்களை வழங்குதல்.

5. வேர்ச் சொற்களி னடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை வெளியிடும் பன்னாட்டு ஆய்விதழ் கொண்டு வருதல்.

6. இவையன்றி, தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே கொண்டமைத்த கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளியிடுதல், போட்டிகள் நடத்துதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.

தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுங்கள்.

வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!