[ WORD BANK ]

img

இக்காலத்தில் பல்வேறு இயல்களில் கலைச்சொற்கள் ஆக்கப்பட்டு வருகின்றன.. ஒரு கலைச் சொல்லைப் படைப்பவர் தொடர்புடைய இயலில் அறிஞராக இருப்பார். அவர் தமிழில் ஏற்கனவே வழங்கி வரும் சொற்களை இணைத்து புதுச் சொல்லாக்கம் செய்வதால் அவை பெரும்பாலும் கூட்டுச் சொற்களாகவே அமைகின்றன; மட்டுமன்றி பெரும்பாலான நேரங்களில் மொழி மாற்றமாகவே அமைகின்றன.

Applied Science என்ற தொடர்ச்சொல்லுக்கு வெவ்வேறு இணையதளங்களில் பயன்பாட்டறிவியல், பயனுறு அறிவியல், பயன்முறை அறிவியல் மற்றும் செயல்முறை யறிவியல் என்றவாறு சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளது. இவற்றுள் எச்சொற்றொடரை நாம் எடுத்தாள்வது?

இன்னும் சொல்லப் போனால் தாம் புதுச் சொல்லாக்கத்துக்காகப் பயன்படுத்தும் தனிச் சொற்கள் தூய தமிழ்ச்சொற்கள் என்ற நம்பிக்கையில் அவ்வறிஞர் செயல்படுகிறார். ஆயினும் இன்னும் தமிழில் வழங்கி வரும் பல சொற்கள் பிற மொழிச் சொற்களாக இருப்பதால் ஒருவேளை அவை பிற மொழிச் சொற்கள் என்ற புரிதல் அவருக்கு இல்லாமல் இருந்தால் அவருடைய நம்பிக்கை மெய்யாக அமையாமல் போகும். ஆகவே புத்தமிழ்ச் சொற்கள் பல நற்றமிழ்ச் சொற்களாக, தூய தமிழ்ச் சொற்களாக அமையவியலாமற் போய்விடுவதை நாம் கண்ணுறுமாறு ஆகி விடுகிறது. அது மட்டுமன்றி, சில நேரங்களில் புதுச் சொல்லாக்கம் நகைப்புக்குரியதாக அமைந்து விடுவதும் கண்கூடு. 

தமிழ் மொழியின் வளர்ச்சி ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதை எம்மைப் போன்ற தமிழர்களால் ஏற்கவே முடியவில்லை. சரி, இதுவே இன்றைய நிலை மாற்ற முடியாத நிலை, விடுவோம். ஆனால் அதை நாம் சரியாகச் செய்ய வேண்டும். நாம் கவனித்த வரையில் ஆங்கிலத்தில் வழக்கிலுள்ள பெயர்ச் சொற்களுக்கோ அல்லது தொடர்ச் சொற்களுக்கோ தமிழில் மொழிபெயர்ப்பு செய்து விட்டு, கலைச் சொற்கள் என அவற்றை அழைக்கிறோம்.

Parallel என்னும் ஆங்கிலச் சொல் பெயர்ச் சொல், பெயரடை, வினைச் சொல் மற்றும் வினையடை ஆகிய வடிவங்களை யுடையது. இச்சொல் எவ்வெவ் விடங்களில் எவ்வெவ் விதங்களி லெல்லாம் ஆளப்படுகிறது என்று காண்போம்.

  • Adjective (Position): If two or more lines, streets, etc, are parallel, the distance between them is the same all along their length. 
  • Adjective (Position, Geometry): (Of two or more straight lines) being the same distance apart along all their length
  • Adjective (Position, Earth Science): One of the imaginary latitude lines around the earth that are parallel to the equator
  • Adjective (Similar): Used to describe an event or situation that happens at the same time as and/or similar to another one
  • Adjective (Computing): Sending through several bits (=units) of information at a time using a link with several channels (=wires or connections)
  • Adjective (Economics, Commerce): Used to describe products that are bought in one country in an unofficial way and then sold more cheaply than usual in a different country
  • Adjective (IT): Involving two or more computer processes happening at one time
  • Noun (Similarity): Something very similar to something else, or a similarity between two things. If something has no parallel or is without parallel, there is nothing similar to it or of the same high quality as it
  • Noun (Position): A line parallel to another line is one that is always at the same distance from the other line
  • Noun (Electronics): If two or more parts of an electrical system are in parallel, they are arranged in a way that means they both receive the same amount of electricity
  • Verb: To happen at the same time as something else, or be similar or equal to something else
  • Adverb: In a position that is alway/rs the same distance from something else

இணையதளப் பக்கங்களில் இச்சொல்லுக்கு சமாந்தரம், இணை, ஒரு போகு ஆகியன தமிழ்ச் சொற்களாகத் தரப்பட்டுள்ளன. இச் சொற்களின் உருவாக்கம் எங்ஙனம் நிகழ்ந்தது, யார் நிகழ்த்தியது, யார் ஒப்பியது, எவ்விடங்களில் எச்சொல் எவ்விதம் பயனுறும் என்பனவும் தெரிந்து கொள்ள வியன்றால் நன்றாக விருக்கும்.

அது மட்டுமன்றி, parallel என்ற ஆங்கிலச் சொல்லுக் கிணையான மேற்காணும் சொற்கள் அவ் வாங்கிலச் சொல் தரும் அனைத்துப் பொருளும் பொதிந்ததாக வுள்ளனவா? ஐயமே!

எல்லாவிதமான சிக்கலும் சிக்கலுக்கான தீர்வும் தமிழ்க் கல்வியில் பொதிந்திருப்பதாகவே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. வேர்ச்சொல் வழிக்கல்வி யொன்றே தமிழில் தற்போது நிலவி வரும் சிக்கல்களுக்கான தீர்வாக அமையும். ஒரு சொல் தமிழ்ச் சொல் தானா என்பதைத் தெரிந்து அறிவதற்கும் பிற மொழிச் சொல்லாயின் அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை யாக்கவும் வேர்ச்சொல் வழிக்கல்வி யொன்றே உற்ற நண்பனா யுதவும். இன்னும், புதுச் சொல்லாக்கத்தில் நிலவி வரும் குறைகளுக்கும் இதுவே தீர்வாக அமையும்.

இற்றைத் தமிழனின் முதன்மைத் தேவை வேர்ச்சொல் வழியிலானதொரு தமிழ்க் கல்வியாகும். அதுவே அவனது வளர்ச்சிக்கும் அவனது தாய்த் தமிழின் வளர்ச்சிக்கும் வழிகோலும். 

இவ் விணையதளம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கங்கள் பலவற்றுள் வேர்ச் சொல் அடிப்படையிலான தமிழ்க் கல்வியும் ஒன்றாகும். தமிழ்க் கல்வி வகுப்புகளுக்கான புத்தகங்கள், பயிற்சி நூற்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றை விரைவில் இப் பக்கத்தில் காணலாம்.

தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுங்கள்.

வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!